வாஸ்கோ ட காமா

வாஸ்கோ ட காமா


வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வாஸ்கோ ட காமா 1460இலோ[1] அல்லது 1469இலோ[2] போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
வாஸ்கோ ட காமாவின் பிறப்பிடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது
வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.[3] டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார்.
எஸ்டெவா ட காமா டோனா இசபெல் சாட்ரெவை மணந்தார். இவர் ஜாவோ சாட்ரெவின் மகள் ஆவார். ஜாவோ சாட்ரெ இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார்.[4]
வாஸ்கோ ட காமாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் குறைவாக மட்டுமே தெரிந்திருக்கிறது. போர்ச்சுக்கீசிய வரலாற்றறிஞர் டெய்க்செய்ரா டி அரகாவோவின் கூற்றுப்படி வாஸ்கோ ட காமா உள்ளூர் நகரான எவோராவில் கணிதவியலும் பயணவியலும் படித்ததாகக் கூறுகிறார். இது காமாவிற்கு வானியல் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வானியலாளர் ஆபிரகாம் சாகுட்டோவிடம் வாஸ்கோ ட காமா வானியல் பயின்றிருக்ககூடும்.[5]
1492இல் போர்ச்சுகல் அரசர் ஜான் II காமாவை செட்டுபால் துறைமுகத்திற்கும், லிஸ்பனின் தென்பகுதிக்கும் அல்கார்வேக்கும் ஃபிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்றுவதற்காக அனுப்பி வைத்தார். இப்பயணத்தின் போது காமா சிறப்பாகச் செயலாற்றினார்.

வாஸ்கோ ட காமாவிற்கு முந்தைய தேடல்கள்[தொகு]

பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஹென்றி த நேவிகேட்டரின் கடல்சார் பள்ளி (Nautical school) ஆப்பிரிக்கக்கடற்கரைப்பகுதியைக் குறித்த தனது பார்வையை அதிகரித்து வந்தது. 1460களில் இருந்து இதன் முதன்மைக் குறிக்கோளானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையைத் தாண்டி இந்தியாவின் வளங்களை (முதன்மையாக மிளகு இதர பிற மசாலா வகைகள்) எளிமையாக அணுகுவதே ஆகும். மேலும் அதற்கேற்றாற்போல் ஒரு நம்பக்கத்தகு கடல் வழியைக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினர்.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும் கட்டுப்பாட்டை வெனிஸ் குடியரசே பெற்றிருந்தது. போர்ச்சுக்கல் பார்த்தலோமியா டயாசின் மூலம் கண்டறியப்பட்ட வழியை வெனிசின் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தத் திட்டமிட்டது.
வாஸ்கோ ட காமா பத்து வயதாக இருந்த பொழுது இந்த நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பார்த்தலோமியா டயாஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து மீண்டும் ஐரோப்பா திரும்பினார். அவர் அங்கு மீன் ஆற்றையும் நவீன கால தென்னாப்பிரிக்காவையும் கண்டறிந்து தெரியாத மற்றொரு கடற்கரை வடகிழக்காகச் செல்வதை அறிந்து வந்தார்.
மேலும் இந்தியாவை அட்லாண்டிக் கடல் மூலம் அடைய முடியும் என்ற கொள்கை ஜாவோ IIஇன் ஆட்சிக்காலத்தில் ஆதரிக்கப்பட்டது. பெரோ ட கோவில்காவும் அஃபோன்சோ டி பைவாவும் பார்சிலோனாநேப்பிள்ஸ், ரோட்ஸ் வழியாக அலெக்சாண்டிரியாவிற்கும் பிறகு ஏடெனுக்கும் ஆர்மசு துறைமுகத்திற்கும் பின் இந்தியாவிற்கும் அனுப்பப்பட்டனர். அது அவர்களது கொள்கைக்கு மேலும் வலுவூட்டியது.
ஆனால் பார்த்தலோமியா டயாஸ் கண்டறிந்த வழித்தடத்திற்கும் மேற்குறிப்பிட்ட இருவர் கண்டறிந்த வழித்தடத்திற்கும் இடையிலிருந்த தொடர்பை இந்தியப் பெருங்கடல் வழியே கண்டறிவதிலேயே அனைவரும் முனைப்புடன் இருந்தனர். அப்பணியானது உண்மையில் வாஸ்கோ ட காமாவின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மானுவெல் I இப்பணியை வாஸ்கோ ட காமாவிற்கு வழங்கினார். இதனை அவர் ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்களை ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்துக் காப்பதில் காமாவின் சிறந்த பணியைக் கருத்தில் கொண்டு வழங்கினார்.

வாஸ்கோ ட காமாவின் முதல் இந்தியப் பயணம்[தொகு]

1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார்.
மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் வணிகக் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கூடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கூடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

நாலடியார் - 14.கல்வி

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai