சுவையா? சுமையா? இந்த நவீன காலம்...!

சுவையா? சுமையா? இந்த நவீன காலம்...!


இந்த உலகில் எந்த ஒன்றும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை! என்ற வாக்கிற்கிணங்க,
'தாயின் மடியில் தவழ்ந்தபோது அம்மாவுக்கு நான் சுமையாக இல்லை, சுவையாக இருந்தேன்.
மங்கை ஒருத்தியை மணந்தபின், அவளுக்கு நான் சுவையாகவும், கொஞ்சம் சுமையாகவும் இருந்தேன்.
இறுதியாய், நான்கு பேர் தோள்களில் பயணித்த போது, யாருக்கும் நான் சுவையாக இல்லை, ஆனால் வெறும் சுமையாக இருந்தேன்."
இதுபோல நாம் வாழ்க்கையில் பிறருக்கு சுவையாகவும், சில வேளைகளில் சுமையாகவும் இருக்கிறோம்.
இருபதாம் நு}ற்றாண்டின் முற்பகுதி வரையில், நம் சமூகம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகத்தான் இருந்தது. ஒரு ஊரில் இருந்த நிலமும், அதனைச் சுற்றியே வாழ்க்கையும் என்ற நிலையில் இருந்தது. அதனால் எல்லா ஆண் பிள்ளைகளும் திருமணத்திற்குப் பிறகும், குடும்பத்தோடு ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்.
காலம் மாறியது, தொழிற்சாலைகள் தோன்றின, நம் பிள்ளைகளுக்கும் பள்ளிக் கதவுகள் திறந்தன. படித்து முடித்தபின், வெவ்வேறு ஊர்களில் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டுக் குடும்பங்கள் மெல்ல உடைந்தன. தாத்தா, பாட்டி, அத்தை, மாமன் என்றிருந்த பெரிய குடும்பங்கள் சிறிய குடும்பமாக சுருங்கின. கணவன், மனைவி அவர்களின் குழந்தைகள் மட்டுமே ஒரு குடும்பம் என்ற நிலை ஏற்பட்டது. இங்குதான் முதியோர்கள் ஒரு சுமையாகச் சில குடும்பங்களில் மாறினர்.சமூக அமைப்பு, பண்பாட்டுச் சிதைவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகள் முதியோர்களின் நிலையைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்று பிள்ளைகள் அனைவரும் தங்களின் பெற்றோர் மீது அன்பும், பாசமும் இல்லாதவர்கள் என்று சொல்வது உண்மைக்கு மாறான குற்றச்சாற்று. முன்னைக் காட்டிலும் இன்று தேவைகள் பெருகியுள்ளன. அந்த அளவிற்குப் பொருளாதார நிலை அனைவருக்கும் உயர்ந்து விடவில்லை.
இன்றைய கணிப்பொறி யுகத்தில் நம் பிள்ளைகள் கணிணிப் படிப்பில் தேர்ந்து, வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கி விட்டனர். அறிவியலின் வளர்ச்சியால் நம் அடுத்த தலைமுறை பெற்றுள்ள பெரும் வாய்ப்பிது. ஆனால் இங்கும் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான இடைவெளி கூடிவிடுகிறது. பெற்றோரின் அருகாமையைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் அரவணைப்பைப் பெற்றோர்களும் இழந்துவிடுகின்றனர்.
ஆயிரம்தான் பொருள் ஈட்டினாலும், அப்பா, அம்மாவை ஐஸ் பெட்டியில் பார்க்கும் நிலைதான் இன்று பிள்ளைகள் பலருக்கு வாய்க்கிறது. சிலருக்கு அந்த நிலை கூட இல்லை. 'பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் சிதையில் எரிந்து கொண்டிருந்த அம்மாவை அவன் ஸ்கைப்பில் பார்க்கும்" நிலைமையும் அரங்கேறி விட்டது. வாழும்போதும், பேரப்பிள்ளைகளைக் கணிப்பொறித் திரையில் தொட்டுக் கொஞ்சுவதுதான் பலருக்கு இன்றைய நடைமுறையாக உள்ளது.
இவையெல்லாம் வலிகள்தான்! என்ன செய்யலாம்? என்னதான் தீர்வு?
'வாழ்க்கை என்றால் யுத்தம்,
யுத்தம் என்றால் வலி,
வெற்றி வேண்டுமெனில் வலியைத் தாங்கு"
வலி தாங்குவது என்பதை விட, வலியைப் புரிந்து கொள்வது என்பதே சரி.
வாழ்வின் மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், வலி தாங்கி வாழப் பழகிக் கொள்வதும்தான் இதற்கு ஒரே தீர்வு.


Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

நாலடியார் - 14.கல்வி

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai