கவிஞர் வாலி கவிதை

கவிஞர் வாலி கவிதை

தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று பாடிய, பாவேந்தர் பாரதிதாசன் தமது குருவாகிய பாரதியாரையே கவிதையில் மிஞ்ச வேண்டும் என்று அகத்தில் ஆசை வைத்தாலும், குருவை மிஞ்சும் அளவிற்கு முகத்தில் மீசை வைக்க வில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.


இதோ அந்தக் கவிதை :-

தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!

இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!


இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...


பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!


யாத்த கவிதைகள்
யாவையும்...


மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!


ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;


இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!


இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-

புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!

கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!


புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...


புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;


ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!


இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;


ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!


அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;

இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;


அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;

இவ் அமுதம்-
பாவலர் நவலர் கடைந்தது;


கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்
கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

நாலடியார் - 14.கல்வி

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai