பெண்களுக்கெதிரான வன்முறை

பெண்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறைகளா...? பதபதைக்க வைக்கும் புள்ளிவிவரம்
பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்தவர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மூன்று சகோதரிகளும் ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று  உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17-ல் ஐ.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25-ம் நாளை சர்வதேச பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
"பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண்  குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என  இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கபடுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன. அனைத்து நாடுகளின் அரசுகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மற்றும் உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்த பாடில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். என்ன தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போதைப் பொருளாக, காமப் பொருளாக, ஆண்களுக்கு அடுத்த படியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை எந்த நாட்டில் வசிக்கும் ஆண்களும் தவிர்க்கத் தயாராக இல்லை.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி