செய்யும் உதவி வீணாகாது

செய்யும் உதவி வீணாகாது !
பொன்வேந்தன் என்னும் ராஜாவிடம், முத்தன் என்னும் இளைஞன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு பறவைகள் பேசும் பாஷை நன்றாக தெரியும். இதை அறிந்த முத்தன், நம் அரசருக்கு மட்டும் எப்படி பறவைகள் பேசும் பாஷை தெரியும் என்று வியப்படைந்தான். ராஜாவுக்கு தினமும் முத்தன் தான் சாப்பாடு பரிமாறுவான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒருநாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு துண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டு பார்த்தான். அதை சாப்பிட பின் முத்தனுக்கு பறவைகள் பேசும் பாஷை புரிய ஆரம்பித்தது.
அதன்பின் முத்தன் அரண்மனையில் இருந்து குதிரையில் கிளம்பிச் சென்றான். போகும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக செல்வதைப் பார்த்தான். அப்பொழுது எறும்பின் தலைவன் முத்தனை பார்த்து, குதிரையை எங்களை மிதிக்காதவாறு ஓட்டிச் செல்லுங்கள் என்றது. முத்தனும் அவ்வாறே ஓட்டிச் சென்றான். அடுத்து, போகும் வழியில் குளம் ஒன்று தென்பட்டது. அக்குளத்தின் அருகில் மீன்கள் அழும் குரல் கேட்டது. உடனே முத்தன் இறங்கிச்சென்று என்னவென்று பார்த்தான். மீன்கள் முத்தனிடம்! நாங்கள் குளத்தில் தாவிக் குதித்து விளையாடும் போது தவறுதலாக இங்கே விழுந்து விட்டோம். எங்களை காப்பாற்றுங்கள் என்றது. முத்தனும் மீன்களை குளத்தில் விட்டுவிட்டு சென்றான். மீன்கள் முத்தனுக்கு நன்றி தெரிவித்தன.
அதன்பிறகு சிறிது தூரம் சென்றபின் ஒரு கூண்டில் தாய் காகம் தன் குஞ்சுகளிடம், இனி நீங்களே உணவை தேடிக் கொள்ளுங்கள் என்று கூறி சேகரித்து வைத்திருந்த தானியங்களை கீழே தள்ளியது. உடனே முத்தன் அந்த தானியங்களை எடுத்து காக்கை குஞ்சுகளுக்கு கொடுத்தான். காக்கை குஞ்சுகள் முத்தனுக்கு நன்றி தெரிவித்தன. அதன்பின் அவன் வேறு நாட்டிற்கு சென்றான். அந்நாட்டில் இளவரசிக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது. முத்தனும் அப்போட்டியில் கலந்து கொண்டான்.
முதலில் அவனை ஒரு குளத்திற்கு அழைத்து சென்று, குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள். அவன் குளத்திற்குள் எவ்வாறு மோதிரத்தை தேடுவது என்று நீந்த ஆரம்பித்தவுடன் அவனுக்கு ஆச்சரியம்! இதோ உங்கள் மோதிரம் என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்து அப்போட்டியில் இருந்து அவனை காப்பாற்றியது.
அடுத்த போட்டியாக, ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும் என்பதுதான். ஆகா, இது நடக்கவே நடக்காது என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி செய்த எறும்புகள் ஒவ்வொன்றாக சேகரித்து ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.
இறுதி போட்டியாக, ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும் என்பதுதான். அவன் இருட்டும் வரை தேடினான். தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான். அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தான்.
தத்துவம் :
நாம் பிறருக்கு செய்யும் உதவி எப்போதும் வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் பயன்தரும். நாம் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்துவிட்டாலும்கூட அது மற்றொரு நாளில் நமக்கு பயன் தரும்.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி