சார்லஸ் ராபர்ட் டார்வின்
சார்லஸ் ராபர்ட் டார்வின்
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை[1] ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.[2][3]இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.[4]
இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.[7]
பொருளடக்கம்
[மறை]இளமை[தொகு]
டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார்.[8] அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.[9] சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.[10] சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார்.[11] மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைநடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்சேர்ந்தார் டார்வின்.[12] படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது.
கடற்பயணம்[தொகு]
தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.[13] சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார்.[14] அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வுசெய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.[15] இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர்.[16] ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.[5][17][18] அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.
ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.[17][19][20] ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.[21] இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.[22][23] “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.
ஆய்வுப்பணிகள்[தொகு]
இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார்.[24][25] இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.[26][27][28] அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.[29][30]
திருமணம்[தொகு]
தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு [31] ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார்.
அவரது குழந்தைகள்[தொகு]
இடார்வீனின் குழந்தைகள்
|
வாழ்நாள்
|
---|---|
வில்லியம் எராசுமசு இடார்வின் | (27 திசம்பர் 1839 – 1914) |
அனே எலிசெபத் இடார்வின் | (2 மார்ச்சு1841 – 23 1851) |
மேரி எலினார் இடார்வின் | (23 செப்டம்பர்1842 – 16 அக்டோபர்1842) |
என்ரிட்டா எம்மா "எட்டீ" இடார்வின் | (25 செப்டம்பர்1843–1929) |
சியார்சு ஓவர்டு இடார்வின் | (9 சூலை 1845 – 7 திசம்பர்1912) |
எலிசெபத் "பெசி" இடார்வின் | (8 சூலை 1847–1926) |
பிரான்சிசு இடார்வின் | (16 ஆகத்து 1848 – 19 செப்டம்பர்1925) |
லியோனார்டு இடார்வின் | (15 சனவரி1850 – 26 மார்ச்சு1943) |
ஓரேசு இடார்வின் | (13 மே 1851 – 29 செப்டம்பர்1928) |
சார்லசு வாரிங் இடார்வின் | (6 திசம்பர்1856 – 28 சூன் 1858) |
நூல்கள்[தொகு]
சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார்.[32] புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
பரிணாம வளர்ச்சிக் கொள்கை[தொகு]
1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்."[5][33] இது புதிய இனங்களின்உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின்.[5][34] இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடுஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது.
டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.
- மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)
- மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)
- உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)
இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும்.
பிற[தொகு]
டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.[36]
Comments
Post a Comment